சில அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பில் சீனா பரிசீலனை

சீனா அதன் 125% வரி விதிப்பிலிருந்து ஒருசில அமெரிக்க இறக்குமதிகளை நீக்குவது பற்றி யோசித்து வருகிறது. அதற்குத் தகுதிபெறும் பொருள்களின் பட்டியலைத் தரும்படி வர்த்தகங்களிடம் அது கேட்டுள்ளது.
சீன வர்த்தக அமைச்சின் பணிக்குழு ஒன்று வரிகளிலிருந்து விலக்கப்படக்கூடிய பொருள்களின் பட்டியலைச் சேகரிப்பதோடு வர்த்தகங்களும் அவற்றின் சொந்த கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.
வரியிலிருந்து விலக்கப்படக்கூடும் 131 பிரிவுகளில் உள்ள பொருள்களின் பட்டியல் வர்த்தகங்கள், வர்த்தகக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சீனா வரிவிலக்கு குறித்து ஆலோசிப்பதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் முதலில் தகவல் வெளியிட்டது. அதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தும் பொருளியல் பாதிப்பு குறித்து அமெரிக்காவைப் போல சீனாவும் கவலைகொண்டிருப்பதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் அமெரிக்கா அதன் வரிகளை நீக்காவிட்டால் இறுதிவரை போராடப் போவதாகவும் சீனா தொடர்ந்து கூறிவருகிறது.இதற்கிடையே, தென்கொரியாவும் அமெரிக்காவும் புதிய வரிகளை நீக்குவதற்கான இலக்குக் கொண்ட வர்த்தக உடன்பாட்டை வரைய ஒப்புக்கொண்டுள்ளன.
ஜூலை வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடப்புக்கு வரும் முன் அந்த உடன்பாட்டை எட்ட இருதரப்பும் முற்படுவதாக முதல் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தையின் முடிவில் வாஷிங்டனில் உள்ள சோல் பேராளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மிகவும் வெற்றிகரமான கூட்டம் நடைபெற்றது என்றார் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட்.“நாங்கள் எதிர்பார்த்ததைவிட துரிதமாகச் செயல்படுகிறோம்,” என்று பெஸ்ஸன்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
பெஸ்ஸன்டும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜேமிசன் கிரியரும் தென்கொரிய வர்த்தக அமைச்சர் சொய் சங் மொக்கையும் வர்த்தக அமைச்சர் அன் டக் கியுன்னெயும் சந்தித்தனர்.“இது நல்ல தொடக்கமாக இருந்தது,” என்ற அன், “அடுத்த வாரம் செயல்முறை அளவிலான பேச்சுவார்த்தையைத் தொடங்கவிருக்கிறோம். ஜூலை 8க்கும் ‘ஜூலை தொகுப்பை’ உருவாக்க முயல்கிறோம்,” என்றார்.
தென்கொரியாவில் மே 15, 16ஆம் தேதிகளில் கிரியருடன் கூடுதல் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று சொய் குறிப்பிட்டார்.