தென்சீனக் கடல் விவகாரத்தில் அமைதிப் பேச்சுக்கு சீனா ஒப்புதல் – பிரதமர் அன்வார்

தென்சீனக் கடலில் பிரச்சினைகளைத் தவிர்க்க ஆசியானும் சீனாவும் ஒப்புக்கொண்டு உள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
தென்சீன கடல் பிரதேச உரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமும் அரசதந்திர வழிகளிலும் தீர்வுகாண ஆசியானில் இடம்பெற்று உள்ள எல்லா உறுப்பு நாடுகளும் சீனாவும் லாவோஸில் நடைபெற்ற 44 மற்றும் 45வது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்திலும் அது தொடர்பான கூட்டத்திலும் சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
பூசலுக்குத் தீர்வு காண, சாத்தியம் இருப்பின் ஆசியான் தரப்புகளைப் பயன்படுத்தலாம் என்பது எனது யோசனை.தென்சீனக் கடல் விவகாரம் தொடர்பில் பிலிப்பீன்சுக்கு நிகழ்ந்துள்ளவை கவலை தரக்கூடியவை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்குத் தெரிவித்து உள்ளோம்.அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்குட்பட்டு பேச்சுவார்த்தை மூலம் அந்த விவகாரம் கையாளப்படும் என்று சீனப் பிரதமர் லி சியாங் உறுதி தெரிவித்துள்ளார், என்று அன்வார், உச்சநிலைக் கூட்டத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தென்சீனக் கடல் வட்டாரத்தில் சபினா ஷோல் என்னும் இடம் அருகே சுற்றுக்காவல் படகுகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பிலிப்பீன்சும் சீனாவும் ஒன்றையொன்று கடுமையாக எதிர்த்து வாதிட்டன.ஒரு மாத காலத்திற்குள் இந்த இரு நாடுகளும் மோதிக்கொண்டது இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
லாவோஸ் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்களில் தென்சீனக் கடல் விவகாரமும் ஒன்று. பத்து ஆசியான் நாடுகளும் அவற்றின் கலந்துரையாடல் பங்காளியான சீனாவும் அந்த விவாதத்தில் பங்கேற்றன.இருதரப்பும் அவரவரின் தேசிய அரசுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் அந்த விவாதக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தீவுகளும் திட்டுகளும் நிறைந்துள்ள தென்சீனக் கடல் வட்டாரத்தில் பெரும்பாலான பரப்பளவை சீனா உரிமை கோரும் நிலையில், வியட்னாம், பிலிப்பீன்ஸ், மலேசியா, புருணை, தைவான் போன்ற ஆசியான் நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன.
இந்தப் பூசல் பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.