டிரம்ப் மிரட்டல்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகளைத் திரும்பப் பெற சீனா ஒப்புதல்
அமெரிக்காவில் உள்ள தங்களின் சட்டவிரோதக் குடியேறிகளை மீட்டுக்கொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக கொலம்பியா, அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டின் சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதனையடுத்து கொலம்பிய மீது 50 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார். பின்னர் கொலம்பியா சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது என செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து சீனா தனது சட்டவிரோதக் குடியேறிகளை மீட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு சீனக் குடிமக்கள் என்று உறுதிப்படுத்தப்படுவோரை சீனா ஏற்றுக்கொள்ளும்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் திங்கட்கிழமை (ஜனவரி 27) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். திட்டமிட்டபடி நடந்து வரும் அந்த செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் மீட்டுக்கொள்ளப்படுவரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 210,000 சட்டவிரோதக் குடியேறிகள் இருந்ததாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது. ஹாங்காங், மக்காவ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரும் அவர்களில் அடங்குவர்.
அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று நம்பப்படுகிறது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு சீனக் குடிமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.
சென்ற ஆண்டு, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத சீனக் குடியேறிகளை நான்கு விமானங்களில் சீனா அழைத்து வந்தது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. 2018ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் அரசாங்கம் அவ்வாறு நாடு திரும்பும் சீனர்களைக் கொண்ட விமானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.