திருகோணமலையில் சிறுமி துஷ்பிரயோகம்; போதகருக்கு 30 வருட கடூழிய சிறை
திருகோணமலை சம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மதப்போதகருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் (11) இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குக் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு எதிராக சம்பூர் பொலிசார் வழக்கு தொடுத்திருந்தனர்.
குறித்த வழக்கின் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் (11) தீர்ப்பு வழங்கப்பட்டபோதே, மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
குற்றவாளிக்கு எதிராக 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்குமாறு நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அரச சட்டத்தரணி கே. நசிகேதன் முன்னிலையாகியிருந்தார்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 03ம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி மூன்று முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஒருமுறைக்காக 10 வருடங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் மூன்று இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.