மும்பையில் 19 வயது இளைஞரின் உயிரை பறித்த சிக்கன் ஷவர்மா – விற்பனையாளர்கள் இருவர் கைது !
மும்பையில் உள்ள ஷவர்மா கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மாவை விரும்பிக்கேட்டு சாப்பிட்ட 19 வயது இளைஞர், வயிற்று வலியுடன் சில தினங்கள் போராடி கடைசியில் இறந்துள்ளார்.
மும்பையில் 19 வயது இளைஞரின் மரணம் தொடர்பாக, ஷவர்மா விற்பனையாளர்களான ஆனந்த் காம்ப்ளே மற்றும் அகமது ஷேக் ஆகியோரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். பலியான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கடந்த வாரம் டிராம்பே பகுதியில் உள்ள கடையில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்டதே அவர் இறந்ததற்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
ஷவர்மாவை சாப்பிட்ட பிறகு போக்ஸே வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டார். உடனே அவரது குடும்பத்தினர் போக்ஸேவை அருகில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் செய்தனர். ஆனபோதும் போக்ஸே உடல்நிலை தேறாது இருந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அந்த மருத்துவமனை வைத்தியர்கள் போக்ஸேக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், போக்ஸே தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கு ஆளானதில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நலம் திரும்பாது போக்சே மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் 336 மற்றும் 273 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவுக்கும், இருவர் கைதுக்கும் வழிவகுத்தது.