வருகின்றது சென்னை 600028 பார்ட் 3…

வெங்கட் பிரபு ஆரம்பத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்து அதிரடியாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் தான் சென்னை 600028. இந்த படத்தை எஸ்.பி.பி சரண் தயாரித்திருந்தார்.
இளவட்ட ரசிகர்களை கவரும் விதமாக, கிரிக்கெட், காதல், காமெடி, என ஒரு கமர்ஷியல் படமாக உருவான இந்த படத்தில், மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ஜெய், பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
சென்னை 600028 திரைப்படம் வெங்கட் பிரபுவை ஒரு வெற்றிப்பட இயக்குனராக பார்க்க வைத்தது மட்டும் இன்றி, இந்த படத்தில் நடித்த சிவா, ஜெய், விஜயலட்சுமி, நிதின் சத்யா, பிரேம்ஜி உள்பட பலருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சென்னை 28 திரைப்படம், சிறந்த படத்திற்காக தமிழக அரசின் விருதையும் சரணுக்கு பெற்று தந்தது.
இந்த படத்தின் முதல் பாகம் 2007-ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2016-ஆம் ஆண்டு வெளியானது. இதில், முதல் பாகத்தில் நடித்திருந்த நச்சத்திரங்கள் நடித்திருந்தாலும் இந்த நடிகர்களுக்கு மனைவியாக சில நடிகைகளும் நடித்திருந்தனர். ஜெய்யின் திருமணத்தை முன்வைத்து தான் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து தற்போது சென்னை 600028 திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தை எடுக்கும் முடிவில் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து, தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.