செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிப்பு

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும்.
முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும்.
நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான இன்றைய தினம் (ஜூலை 8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மனித எலும்புக்கூடுகள் இன்னும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, ஜூன் 2 புதன்கிழமை இரண்டாவது இடத்தில் அகழ்வு ஆரம்பமானது.
இதற்கு ‘தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2’ என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மூன்று என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.
“தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2 இல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் 3 எலும்பு எச்சங்கள் இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. நாளை அது அகழ்வுக்கு இலக்கமிடப்படும். அதன் பின்னர் அகழ்வு இடம்பெறும்.”
அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமான முதல் இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 1 எனவும், வரவிருக்கும் மழைக்காலத்தை சமாளிக்க வாய்க்கால் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 3 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக, தடயவியல், மானுடவியல் மற்றும் தடயவியல் தொல்பொருளியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற சட்டத்தரணி ரணிதா ஞானராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
முதல் தடயவியல் அகழாய்வுத்தளத்தில் 20 மீற்றர் தொலைவில் 11 மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட ஒரு புதிய கான் ஒன்று தோண்டப்பட்டுள்ளது, இது செம்மணி மனித புதைகுழியின் பரந்த தன்மையைப் பற்றிய ஒரு சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, துணிகள், இரண்டு காலணிகள், ஒரு சிறு குழந்தையினுடையது என நம்பப்படும் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு பொம்மை உள்ளிட்ட கருவிகளும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அங்கீகரித்தது.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு அருகில், மனித புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் விரிவான, வலுவான விசாரணை தேவை எனக் கூறியிருந்தார்.
மனித உரிமைகள் ஆணையாளரை மனித புதைகுழியை ஆய்வு செய்ய அனுமதிப்பதாக பகிரங்கமாக உறுதியளித்த அரசாங்கம், அதைத் தடுப்பதற்கான தோல்வியுற்ற, திட்டமிட்ட முயற்சி என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்கொள்கிறது.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், அங்கு அதே ஆண்டில் 82 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.