ரணிலுக்கு எதிராக மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe , அவரது பாரியாரின் பட்டமளிக்கு விழாவுக்காக லண்டன் சென்றது உத்தியோகப்பூர்வ விஜயம் அல்லவென்பது தெரியவந்துள்ளது என சட்டமா அதிபர், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
36 மணிநேரத்துக்குள் 166 லட்சம் ரூபா நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் Thileepa Peiris மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வுக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை, அவருக்கு “பெல்கனி” யிலேயே கதிரை ஒதுக்கப்பட்டிருந்தது எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
ஒரு மாத காலத்துக்குள் இது தொடர்பான விசாரணையை நிறைவுசெய்ய முடியும் என நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது சந்தேக நபரிடம் (ரணில்) விசாரணை முடிவடைந்துவிட்டது. இரண்டாவது சந்தேக நபரிடம் (சமன் ஏக்கநாயக்க) (இன்று) விசாரணை நடத்தப்படும்.
சிலவேளை முதலாம் சந்தேக நபரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டி வரலாம். எப்படியும் ஒரு மாதத்துக்குள் விசாரணை நிறைவுபெறும் என்பதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் வாதமாக இருந்தது.
ரணில் விக்கிரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டினர். ரணிலுக்கு பிணை கோரியும் காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
மேற்படி (லண்டனில் உள்ள) பல்கலைக்கழகத்திடம் தகவல் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு எதிர்வரும் ஏபர்ல் மாதம் 29 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என தெரியவருகின்றது.





