செனல் 4 வீடியோ பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை – பாதுகாப்பு அமைச்சு கொந்தளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உத்தியோகப்பூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானாவின் தகவல்கள் அடங்கிய ஆவணப்படம் ஒன்றினை செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தற்கொலை குண்டுதாரிகளுடன் சந்திப்பை நடத்தியதாகவும் குறித்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு செனல் 4வின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அதன் சட்ட அமுலாக்க பிரிவினர், பாதுகாப்பு படையினர் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் என்பன விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
இதன்படி, சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டமை தெரியவந்ததாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பழியை இராணுவப்புலனாய்வு பிரிவு மீதும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதும் அப்பட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிப்பதாகவும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் வேதன பட்டியலில் இருந்ததில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஏற்படும் எதிர்பாராத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு செனல் 4 தொலைக்காட்சியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படம் அடிப்படையற்ற பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த விடயங்களை தங்களது கட்சி நிராகரிப்பதாக அதன் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அந்த சந்தர்ப்பத்தில் எந்த பிரச்சினையும் காணப்படவில்லை எனவும் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலகுவாக வெற்றி பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.