சாந்தன் உயிரிழப்பு: ராபர்ட்பயாஸ் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பு கடிதம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் முஜிபுர்ரஹ்மான், ராபர்ட்பயாஸ், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் ராபர்ட்பயாஸ் உலகத் தமிழர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில் ”முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய, இலங்கைத் தமிழர் சாந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த அவருக்கு கல்லீரல் செயலிழப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறந்தார்.
ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிறைத் தண்டனைக்குப் பின்னரும் அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் உயிரிழந்தார்.
33ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.
அது போலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அகதிகள் முகாமில் கடந்த இரண்டு நாட்களாக முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று வருவாய்த்துறையினர் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
ராபர்ட்பயாஸ், முஜிபுர்ரகுமான் தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்