”ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள்” : இரா.சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய அதிகாரிகள் இல்லாமல் போனதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் இருக்கும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்துக்கொண்டிருப்பதுதான் அரசியல் தீர்வினை அடையும் திட்டம் என அவர்கள் கருதுவார்களானால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரியல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இதத்ததான முகாம் இன்று பெரியகல்லாறு இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.லண்டனில் உள்ள சுதாகர் கலிஷ்கா அவர்கள் இந்த இரத்ததானமுகாமிற்கான பூரண அனுசரணையினை வழங்கியிருந்தார்.
பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 14 ஆவது நிறைவினையொட்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த வங்கி பிரிவினரால் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் தலைவர் அ.அகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது இதில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தர்களாக சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வணக்கம் நே.கமல்ராஜ், சிவ சுப்பிரமணிய ஆலய தலைவர் பேரின்பராஜா, பெரியகல்லாறு பிராந்திய வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்சய் மற்றும் ஆலய ஆலயங்களின் தலைவர்கள், ஊர் பிரதிநிதிகள் இரத்த கொடையாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கொடையார்களர்களிடம் இருந்து இரத்தம் பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வாங்கி பிரிவினரும் அதேபோன்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினரும் கலந்து சிறப்பித்தனர்
இதன்போது இரத்த கொடையாளிகளுக்கான ஒரு நினைவுச் சின்னமாக ரீசேர்ட் ஒன்றும் வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,
”சுகாதாரத் துறையை பொறுத்தவரையில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. எங்களுடைய சுகாதாரத் துறையை பொறுத்த அளவில் இந்த வைத்திய நிபுணர்களுடைய சில இடமாற்றங்கள் தொடர்பான சில குறைபாடுகளை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையினுடைய அபிவிருத்தி சங்கம் என்னிடம் தந்திருக்கின்றார்கள். நிர்வாகத்தினரும் தந்திருக்கின்றார்கள் அதேபோலத்தான் வைத்தியர்களின் பற்றாக்குறை இது களுவாஞ்சிகுடி மாத்திரமல்ல இலங்கை முழுவதும் பாரிய குறைபாடாக இருக்கின்றது.
இதற்கான காரணம் தொடர்ச்சியாக இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைமையின் காரணமாக இந்த நாட்டைவிட்டு வைத்தியர்கள் நிபுணர்கள் இந்த நாட்டில் வாழ முடியாத சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றதே பிரதான காரணம்.
எதிர்வரும் வருடத்திலே ஆயிரக்கணக்கானோர் வைத்தியர்கள் இந்த நாட்டை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்று அந்த துறையை சேர்ந்த முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய அதிகாரிகள் இல்லாமல் போனதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் இருக்கும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கு காரணம் கோட்டபாய ராஜபக்சே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு கொடுத்த வரிச்சலுகைகள் அதாவது கூடுதலான வசதி உள்ளவர்களுக்கு வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கான லாபம் உழைக்கின்றவர்களுக்கு வரி சலுகைகளை வழங்கினார்கள.; இவை அனைத்திற்கும் ஆதரவாக வாக்களித்தவர்கள் எமது மாவட்டத்திலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
இன்று இந்த நாட்டிலே சுகாதாரத்துறை முழுமையாக இந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் வரவு செலவு திட்டமே. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார் கோட்டபாய ராஜபக்ச இதற்கு தனியாக பொறுப்பில்லை அவர் முன்வைத்த திட்டங்களை ஆதரித்து பாராளுமன்றத்தில் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு என்று.
நாங்கள் வாக்களிக்கவில்லை நாங்கள் அந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தான் வாக்களித்தோம.; ஏனென்றால் நமக்குத் தெரியும் நாடு வங்குரோத்து நிலையை அடையப் போகின்றது, வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியே செல்ல போகின்றார்கள் ,வைத்திய அதிகாரிகள் இந்த நாட்டை விட்டு போனால் குறிப்பாக வடக்கு கிழக்கு இருக்கின்ற வைத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக எங்களுடைய கிராமிய வைத்தியசாலைகளான துறைநீலாவனை, பெரிய கல்லாறு, களுதாவளை, செட்டிபாளையம், மகிளூர், பழுகாமம், மண்டூர், மகிழடித்தீவு போன்ற இந்த பிரதேசம் அதே போன்று தான் நமது கல்குடா பிரதேசத்திலும் ஆரம்ப சிகிச்சை பிரிவுகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் அதனால் தான் அந்த தவறான கொள்கையை நாங்கள் எதிர்த்து இருந்தோம்.
ஆனால் தங்களுடைய சுயலாபங்களுக்காக அரசாங்கத்தை ஆதரித்து இன்று சுகாதாரத் துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் அளவிற்கு காரணமாக இருந்தவர்களை மக்கள் இனிவரும் காலங்களில் சரியான பாடத்தை படிப்பிக்க வேண்டும் என்பதனை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் தொடர்ச்சியாக இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்பதனை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டு வருகின்றோம். அதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய கட்சியை பொறுத்த வரையில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி மக்களுக்கு இதுவரையில் தெரியாது. தேர்தல் காலங்களில் தாங்கள் தனி நாட்டை பெற்றுத் தருவது போல பேசிக்கொண்டு வருவதைப்போல அதனைத் தொடர்ந்து இவர்களுடைய நிலைப்பாடு என்ன என்று இன்று கூட தெரியாத நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் எது வித பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டதாக தெரியவில்லை இந்த நாட்டிலேயே ஒரு தீர்வு வர வேண்டுமென்று சொன்னால் தீர்வு வரவேண்டும் தீர்வு வர வேண்டும் என்று எங்களுக்குள்ளே மட்டும் பேசிக்கொண்டிருந்து சரி வராது நாங்கள் அதற்கான முன்னெடுப்பை செய்ய வேண்டும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் தோல்வி அளிக்கலாம் ஆனால் முயற்சிகள் செய்ய வேண்டும்.
அவ்வாறாக எந்த முயற்சிகளும் எடுக்காமல் வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டிருப்பது அரசியல் தீர்வை அடைகின்ற திட்டம் என்றால் அவர்களுடைய கருத்துக்களுக்கு எல்லாம் மக்கள் எதிர்வரும் தேர்தலில் பதிலளிப்பார்கள்” என்றார்.