இலங்கையில் மீண்டும் மின் கட்டணம் குறையும் வாய்ப்பு!
இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி நுகர்வோருக்கு வினைத்திறன் மற்றும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய மின்சார சட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த போக்கு டிசம்பர் வரை நீடித்து, இலங்கை மின்சார சபை இலாபத்தை அடையுமானால், உபரியின் மூலம் நுகர்வோர் பயனடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது என்றே கூற வேண்டும்.
இலங்கைச் சபையின் மறுசீரமைப்பு அறிக்கையும் புதிய மின்சாரச் சட்டம் தொடர்பான பிரேரணையும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உத்தேச புதிய மின்சார சட்டத்தை வர்த்தமானியில் பிரகடனம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்வெட்டுக்கு பின் மீண்டும் இணைப்புக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது 3000 ரூபாவாக உள்ள மீள் இணைப்புக் கட்டணம் 1000 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாக திருத்தப்படும் என நம்பப்படுகிறது” என அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்தார்.