2026 இல் 5% வரை பொருளாதார வளர்ச்சி – மத்திய வங்கி கணிப்பு
2026 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திற்கான இலங்கை மத்திய வங்கியின் கொள்கை நிகழ்ச்சி நிரல், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை ஆவணம், எதிர்வரும் காலகட்டத்தில் விலை ஸ்திரத்தன்மையைப் பேணுதல், நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றை மத்திய வங்கியின் முக்கிய முன்னுரிமைகளாகக் குறிப்பிடுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4 முதல் 5 சதவீதம் வரை வளருமென மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் ஆதரவுடன் நாட்டின் இயல்புநிலை மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை மத்திய வங்கி பாராட்டியுள்ளதுடன், பேரிடர் தயார்நிலை மற்றும் நீண்டகால மீள்தன்மை தொடர்பான நடவடிக்கைகளுக்கு அவசரமாக முன்னுரிமை வழங்க வேண்டியதையும் வலியுறுத்தியுள்ளது.
வெளிப்புற நடப்புக் கணக்கில் செலவை விட வரவு அதிகமாக இருப்பது, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நேர்மறை நிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சந்தையால் நிர்ணயிக்கப்படும் மாற்று விகிதம் குறைந்த நிலையற்ற தன்மையுடன் இருந்து, படிப்படியாக தேய்மானம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் வெளிப்புறக் கடன் சேவைகள் மற்றும் வாகன இறக்குமதி தேவைகள் அதிகரித்திருந்த போதிலும், மொத்த அதிகாரப்பூர்வ இருப்புக்கள் (GOR) 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
இது பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த இருப்பு அளவாகும்.
மேலும், நிதி கொள்கை உருவாக்கம் மற்றும் அதன் செயல்படுத்துதலை மேம்படுத்துவதோடு, கொள்கை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்கணிப்புத்தன்மையை அதிகரிக்கும் பல நடவடிக்கைகளை 2026 ஆம் ஆண்டில் அமுல்படுத்த மத்திய வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




