மனச்சோர்வு, மறதி ஏற்படக் காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள்
மனித உடலில் கோலின் (Choline) என்ற ஊட்டச்சத்து குறைவாக இருந்தால், பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குறைபாடு காரணமாக அதிக சோர்வு, திடீர் மறதி அல்லது தசை பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மனிதனின் நரம்பு மண்டலம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கோலின் (Choline) ஊட்டச்சத்து முக்கியமானது ஆகும்.
மனித உடல் சிறிதளவு கோலினை உற்பத்தி செய்தாலும், உணவு மூலமே இதன் பெரும்பான்மையான தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தக் கோலின் சத்துக் குறையும்போது, மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தொடர்ச்சியான சோர்வு, திடீர் தசைப்பிடிப்புகள் போன்றவை ஏற்பட்டால், அது கோலின் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித மூளையின் தகவல் பரிமாற்றத்திற்கு கோலின் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் பற்றாக்குறை ஏற்படும்போது, கவனம் செலுத்துவதில் சிரமம், குழப்பமான மனநிலை மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுப்பதில் கோலின் முக்கியப் பங்காற்றுகிறது. இதன் குறைபாடு, ‘ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்’ போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வயதுவந்த ஆண் ஒருவருக்கு நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லிகிராம் கோலினும், பெண்ணுக்கு 425 மில்லிகிராம் கோலினும் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது கருவின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது.
கோலின் சத்தினை அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், சோயா மற்றும் குயினோவா போன்ற உணவுகளை உட்கொள்வது அவசியம்.
மருத்துவ ஆலோசனையின்படி மருந்துகள் மூலமும் இதற்கான தீர்வினைப் பெற முடியும்.
கோலின் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





