அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க முடியாது! மகிந்த மற்றும் பசில் ஜனாதிபதியிடம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய அதிகாரம் தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர்.
உள்ளுர் வளங்களை பாதுகாக்கவும், தனியார்மயத்திற்கு எதிராகவும், ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை பேணவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பொதுஜன பெரமுனவையும் மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்ததாகவும், தற்போதைய ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு எதிராக செயற்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடருமானால் தற்போதுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.