அமெரிக்காவில் 1,50,000 மாணவர்களின் கடன்கள் இரத்து – ஜனாதிபதி அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் 1,50,000 மாணவர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
12 ஆயிரம் டொலருக்கும் குறைவாக கடன் பெற்று 10 ஆண்டுகளாக திருப்பிச் செலுத்தி வந்த மாணவர்களின் கடனே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், புதிய திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் கடனை ரத்து செய்வதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படும் என அறிவித்துள்ள ஜோ பைடன், இத்திட்டத்தின்படி மொத்தம் 1.2 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
‘சேவ்’ மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் பதிவுசெய்து, 12,000 டொலர் அல்லது அதற்கும் குறைவாக கடன் பெற்று 10 ஆண்டுகளாக திரும்ப செலுத்தி வரும் மாணவர்கள் கடன் இரத்துக்கு தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. தள்ளுபடி செய்யப்படும் கடனின் மொத்த மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று முதல் எங்கள் ‘சேவ்’ மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் 10 ஆண்டுகளாக தங்கள் கடன்களை செலுத்தி, 12 ஆயிரம் டாலர் அல்லது அதற்கும் குறைவாக கடன் பெற்ற மாணவர்களுக்கு முதல் சுற்றாக கடன் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் 1,50,000 அமெரிக்க மாணவர்கள் பயன்பெறுவர். மேலும் கூடுதல் மாணவர்களுக்கு கடன் ரத்து செய்ய நாங்கள் முயன்று வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜோ பைடனின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.