புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைக்கும் கனேடிய அரசு : ட்ரூடோ வழங்கிய உறுதிமொழி!
கனடா நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புதிய குடியேறிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரூடோவின் லிபரல் அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும் திட்டத்திற்காக விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து அடுத்த ஆண்டு 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த எண்ணிக்கை 2026 இல் 380,000 ஆகவும், 2027 இல் 365,000 ஆகவும் குறையும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு தொழிலாளர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மக்கள்தொகை வளர்ச்சியைப் பராமரிப்பதற்கும் இடையில், சமநிலையை நாங்கள் சரியாகப் பேணவில்லை என ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“கனடாவின் எதிர்காலத்திற்கு குடியேற்றம் அவசியம், ஆனால் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அது நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
நான்காவது முறையாக பதவியேற்க வேண்டாம் என தனது சொந்தக் கட்சிக்குள் இருந்து அழைப்புகளை எதிர்கொண்டுள்ள ட்ரூடோ, அவரது குடியேற்றக் கொள்கைகள் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியால் வீடு கட்டும் வசதியில் எதிர்மறையான தாக்கம் ஆகியவற்றின் மீது பெருகிய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் கனடா கொண்டு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை தனது அரசாங்கம் குறைக்கும் என்றும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சியை முடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அதிகமான மக்களுக்கு இடமளிக்கும் வகையில், சுகாதாரப் பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் சமூக சேவைகளில் தேவையான மாற்றங்களைச் செய்ய அனைத்து நிலை அரசாங்கங்களையும் அனுமதிக்க கனடா அதன் மக்கள்தொகை வளர்ச்சியை உறுதிப்படுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.