இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கனடா வெளியுறவு அமைச்சர்

அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இன்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை (S. Jaishankar) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சரிந்த உறவுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் (Hardeep Singh Nijjar) கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியபோது உறவுகள் மோசமான நிலையை அடைந்தன. இதனால், இரு நாடுகளும் இடையிலான விசா சேவைகளை நிறுத்தப்பட்டன மற்றும் உயர்மட்ட தூதர்கள் வெளியேற்றபட்டனர்.
இந்நிலையில், பல மணிநேரம் நடந்த கலந்துரையாடலுக்கு பிறகு, அனிதாவின் வருகை இந்தியா-கனடா கூட்டாண்மைக்கு “புதிய உத்வேகத்தை” ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் மக்களிடையேயான உறவுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.