கனடாவில் முதன்முறையாக ஒருவருக்குப் பறவைக் காய்ச்சல்
கனடாவில் மனிதர் ஒருவருக்கு H5 பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது. இது அந்நாட்டின் முதல் சம்பவம்.
மேற்கு கனடிய மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதின்ம வயது இளைஞரிடம் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 9) கூறினர்.
பறவை அல்லது விலங்கிடம் இருந்து அவருக்குத் தொற்று பரவி இருக்கக்கூடும் என்று மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.குழந்தைகளுக்கான மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
அவருக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று எதன் மூலம் பரவியது என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவருடைய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பொதுமக்களுக்குப் பரவும் அபாயம் குறைவாக உள்ளதென கனடிய சுகாதார அமைச்சர் மார்க் ஹாலண்ட் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
“இது ஓர் அரிதான சம்பவம். எங்கிருந்து தொற்று பரவியது என்பதைத் தெரிந்துகொள்ள முழுமையான விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்,” என்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநில சுகாதாரத் துறை அதிகாரி போனி ஹென்றி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கோழிப்பண்ணை மற்றும் பால்பண்ணை ஊழியர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பரவியதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாயின.