இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கனடா குற்றச்சாட்டு

காஸா மக்களுக்கு வான்வழியாக உதவிப் பொருள்களைக் கனடா வழங்கியுள்ளது. அதுகுறித்த தகவலைக் கனடிய அரசாங்கம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்டது.
கிட்டத்தட்ட 22 மாதங்களாகக் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அனைத்துலக விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கனடா தெரிவித்தது.
காஸாவிவுக்கு முதன்முறையாக ஏறத்தாழ 10 டன் உதவிப் பொருள்களை வான்வழியாகக் கனடா வழங்கியது. கனடாவின் ஆயுதப்படை அதனை மேற்கொண்டது.
கனடாவையும் சேர்த்து ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் உதவிப்பொருள்களை வழங்கின.
கடந்த வாரம் கனடா, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாகத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது.
கடந்த சில மாதங்களாகக் காஸாவுக்கு உதவிப்பொருள்களை அனுப்புவதை இஸ்ரேல் கடுமையாகத் தடுத்து வருகிறது. இதனால் காஸா மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
காஸா மக்களுக்குத் தேவையான உதவிப்பொருள்களை வழங்கவிடாமல் தடுப்பது அனைத்துலக விதிமுறைகளை மீறும் நடவடிக்கை என்று கனடா தெரிவித்துள்ளது.