பொது இணக்கப்பாட்டை இலங்கையில் காண முடியுமா?
“13 ஆவது திருத்த சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றமே முடிவெடுக்கவேண்டுமென்றும் பொது இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்போம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரளுமன்றத்தில் அறிவித்த மறுகணமே அதற்கு எதிரான கருத்துக்களும் ஆதரவான கருத்துக்களும் வெளிவந்த வண்ணமே இருக்கிறது எதிரான கருத்துக்கள் யாரிடமிருந்து வந்திருக்கின்றன ஆதரவான கருத்துக்கள் எவரிடமிருந்து வந்திருக்கமுடியுமென இலகுவாகவே புரிந்து கொள்ளமுடியும்.
36வருடகால வயதைக்கொண்டிருக்கும் இத்திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு முடிவு கண்டுவிடலாம். இந்தியாவின் அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம், மறுபுறம் மனித உரிமை மீறல், யுத்தக்குற்றம், இனவழிப்பு என தூக்கு கயிற்றை இலங்கைக்குமேல் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தப்பித்து கொள்ளலாம். எனவே 13 அவது திருத்தத்தையாவது தமிழ் மக்களுக்கு வழங்கிவிட வேண்டுமென்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் எதிர்பார்ப்பாகவும், ராஜதந்திர நகர்வாகவும் இருக்கலாம்.. ஏலவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஒரு முயற்சியாகவும் இது இரக்கலாம்.
தமிழர் தரப்பை பொறுத்தவரை “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்” என்ற அவசரத்தின் காரணமாக 13 ஆவது திருத்தம் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். ஏலவே மஹிந்த ராஜபக்ஷவினால் ஏமாற்றப்பட்டு , நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசியல் தீர்வுக்காக காத்திருந்து, கோத்தபாய ராஜபக்ஷ காலத்தில் அடங்கியிருந்த தமிழ் தரப்பினர், தற்போதைய சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தவேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டு வருகிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இதேவேளை இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக நாட்டம் காட்டாத இந்திய தலைமைகள் மிக விரைவில் பொதுத்தேர்தலை எதிர் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் விஜயத்தை பயனுடையதாக்க அழுத்தங்களை பிரயோகித்ததன்காரணமாக இந்த 13 முயற்சி ஜனாதிபதியால் முடுக்கிவிடப்பட்டிருக்கலாம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், அதிகார பகிர்வை மேற்கொள்வதற்கும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு பொது இணக்கப்பாட்டை கொண்டுவரவேண்டும் என்ற கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது பாராட்டுக்கரிய விடயமாகும்.
ஆனால் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள் மற்றும் அரசியல் குழப்ப நிலைகள் ஜனாதிபதியின் இலக்குக்கு ஆப்பு வைக்கும் நிலையையும் உருவாக்கலாம். காரணம் ஏன்னதான் முயற்சிகளை மேற்கொள்ள ஜனாதிபதி நினைத்தாலும் பாராளுமன்றில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்று இணைக்காமல் 13 அவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவோ அதிகார பகிர்வை முன்னெடுக்கவோ முடியாது என்பது வெளிப்படையாகவே தெரிகிறவிடயம்.
இதற்கு பலகாரணங்கள் பிற்புலமாக அமைந்து காணப்படுகிறது என்தே யதார்த்தம். உதாரணமாக அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியான பொதுஜனபெரமுனவின் நிலப்பாடானது தமிழ் மக்களின்; தீர்வு விடயத்தில் முரண்பாடகவே இருந்து கொண்டிருக்கிறது இதை சரத்வீரசேகராவே வெளிப்படையாக தெரிவித்துவருகிறார். முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா கே.எம்பி ராஜரட்ண ஆர்.ஜி சேனநாயக்க, ஸ்ரீல்மத்தியு போன்ற இனவாதிகளின் வழியில் இவர் திறம்படவே செயற்பட்டுவருகிறார்.
என்னதான் சர்வகட்சி கூட்டத்தை கூட்டி, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களோடு கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்தாலும், தமிழர்களுக்கான தீர்;வ விடயத்தில் உடன்பாடு காண்பது என்பது கல்லில் நார் உரித்த கதையாகவே போய்விடுகிறது. பாராளுமன்றில் பலம் கொண்டதாக காணப்படும் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் தற்போது என்ன தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது அதை அவர் கைவிடவேண்டும் என மறுதலித்துவருகிறார்கள்.
இவர்களின் நிலைப்பாடு மாறவேண்டுமானால் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ தனது மௌனத்தை கலைக்கவேண்டும்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் இன்னொரு கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி. இதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கி வருகிறார்;. இவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் சாசன திருத்தம், அதிகார பகிர்வு என்ற விடயங்களில் காலம் கடத்தப்பட்டதே தவிர ஆழமான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.
ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு பிளவு படாத நாட்டுக்குள் தீர்வு என்றெல்லாம் பேசப்பட்டதே தவிர வெண்ணைதிரண்டு வருகிற வேளையில் தாழி உடைந்த கதைபோல் இறுதியில் அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை அனைத்தையுமே பூஜ்ஜியமக்கிவிட்டது.நல்லாட்சி அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சி பற்றி இரா. சம்பந்தனே “நாம் ஏமாற்றப்பட்டுவிடடோம்” என்று குறிப்பிட்டிருந்தார். அதவுமன்றி நல்லாட்சிக்காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி இறக்;கி மஹிந்தவை பிரதமராக்கிய சம்பவம் நாட்டை குழப்ப நிலைக்கு கொண்டு சென்றதையும் மறந்துவிட முடியாது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் இன்னொரு கட்சி மக்கள் விடுதலை முன்னணியினர், இது தவிர பேராசிரியர் ஈ.எல்.பீரிஸ், பிவித்துரஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்பன்;பில விமல்வீரவன்ச. போன்றவர்கள் உதிரிகளாக இருந்துகொண்டு ஜனாதிபதியின் ஒவ்வொரு செயற்பாட்டையும் விமர்சிப்பவர்களாகவும், கண்டிப்பவர்களாகவும், காணப்படுகிறார்கள். இவர்கள் பொலீஸ் அதிகாரத்தை மாகாண சபை நிரலில் இருந்து இல்லாமல் ஆக்க 22 ஆவது திருத்தத்தை கொண்டுவரப்போவதாக எச்சரித்தக் கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதாக தெரியவில்லை.
இங்கை பாராளுமன்றத்தின் போக்கு இவ்வாறு தாறு மாறாக இருக்கும் நிலையில் இலங்கையிலுள்ள நான்கு பௌத்த பீடங்களும் ஜனாதிபதியின் 13 திருத்த முன்னெடுப்புக்கள் தொடர்பில் தமது கடுமையான அதிருப்திகளை தெரிவித்திருக்கிறார்கள். இந்த பீடங்களை மீறி அரசியலை முன்னெடுப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத காரியம். கடந்த காலங்களில் பௌத்த பீடங்களின் செல்வாக்கும் அழுத்தமும் இலங்கை அரசிலில் எவ்வாறு இருந்து என்பது தெரியாத ஒருவிடயமல்ல.
ஜனாதிபதியை சுற்றி இத்தகையதோரு நச்சு வலை பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாகவோ அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முகமாகவோ நடவடிக்கைகளை எடுக்க முடியமா? அதிலும் குறிப்பாக பொலீஸ் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு தாரைவார்த்து கொடுப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா என்பது மிகவும் கவனமாக சிந்திக்கப்படவேண்டிய விடயம். கடந்த 72 வருடங்களுக்கு மேலாக தமிழ்த்தரப்பினரால் எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னவாயின என்பது தெரியாத ஒருவிடயமல்ல. இருந்தாலுங்கூட உண்மையில் இவை வென்றெடுக்கப்படவெண்டுமாயின் தமிழ்த்தரப்பினர் குறிப்பாக வட கிக்கினர்,முஸ்லீம் சமூகத்தவர் , மலையகத்தவர் வேற்றுமைகளை விட்டு விட்டு ஒன்று பட்டு செயற்பட்டால் மட்டுமே குறித்த இலக்கை எட்ட முடியும்.
திருமலை நவம்