7.6 சென்டிமீட்டர் மழைக்கே வெள்ளத்தில் மூழ்கிய கலிபோர்னியா!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 7.6 சென்டிமீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையோர பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடற்கரையோர நகரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் 7.6 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்ததால் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
முழங்கால் அளவிற்கு தண்ணீர் சாலைகளில் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வெள்ள நீர் வெளியேறாததால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால், அதில் இருக்கும் வாகன ஓட்டிகளை பொலிஸார் மீட்டு வருகின்றனர். மேலும் மழையால் பாதிக்கப்படாத சாலைகள் வழியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கனமழை காரணமாக 60க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாகவும், முதியவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு ஒன்றில் மழை நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாலைகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதால் பொதுமக்கள் தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை மட்டும் கொட்டியதால் பொதுமக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.