இலங்கை – மலேசியா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான (FTA) பொருத்தமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளப் பெறுவதற்கு ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதியின் பல்வகைப்படுத்தல் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்துவது முக்கியம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மலேசியா போன்ற வலுவான மற்றும் மூலோபாய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை இலங்கை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.
இலங்கையின் 34வது ஏற்றுமதி இடமான மலேசியா, ASEAN மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கிய அங்கத்துவ நாடாகும். 2023 ஆம் ஆண்டில், மலேசியாவுக்கான ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 58.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எட்டுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.