இந்தியாவில் பனிமூட்டம் காரணமாக பேருந்து -லொரி நேருக்கு நேர் மோதல்; 30 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் அமைந்துள்ள டெல்லி – மும்பை விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஜனவரி 2) காலை பேருந்தும் லொரியும் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்தனர். அவர்களில் பத்துப் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அந்தப் பேருந்து உஜ்ஜைனிலிருந்து டெல்லி சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
லாட்லி கா பன்ஸ் எனும் கிராமத்துக்கு அருகே விபத்துக்குள்ளான அந்தப் பேருந்தில் 45 பேர் பயணம் செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
காலையில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
லொரியுடன் பலமாக மோதியதில் பேருந்தின் முன்பகுதி மோசமாகச் சேதமடைந்தது.
விபத்து நடந்த இடத்தைக் காட்டும் படங்களில் ஓட்டுநரின் இருக்கை வரையிலான பாகங்கள் பலத்த சேதமடைந்திருப்பதைக் காணமுடிகிறது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கவலைக்கிடமான நிலையில் உள்ளோர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.