இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து – 18 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி ஒரு தனியார் பேருந்து இடிபாடுகளுக்குள் புதைந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து பிலாஸ்பூர் அருகே உள்ள குமர்வினுக்கு சுமார் 30 முதல் 35 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் அறிவித்துள்ளார்.
“இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டதில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றிய எண்ணங்களே என்னுள் நிறைந்து உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.