கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4-ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 474 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் இருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினாலும், நிதீஷ் குமார் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவுடனான இந்த தொடரில் மட்டும் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், வெறும் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, சராசரியாக 20 ரன்களுக்குள் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
பும்ரா தற்போது 19.38 என்ற சராசரியுடன் 202 விக்கெட்டுகளை கைப்பற்றி, குறைந்த சராசரியுடன் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான்களான மால்கம் மார்ஷல் (20.94 சராசரியில் 376 விக்கெட்டுகள்), ஜோயல் கார்னர் (20.97 சராசரியில் 259 விக்கெட்டுகள்) மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (20.99 சராசரியில் 405 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.
டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் பும்ரா தனது 200வது விக்கெட்டை பதிவு செய்தார். அதே ஓவரில் மிட்செல் மார்ஷையும் அவர் வெளியேற்றினார். மேலும், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது அலெக்ஸ் கேரியின் விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார்.
இந்த சாதனையின் மூலம், கபில் தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். கபில் தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பும்ரா வெறும் 44 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அளவில், ரவிச்சந்திரன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.