உணவுடன் சேர்த்து தாலியை விழுங்கிய எருமை மாடு: அறுவை சிகிச்சை மூலம் மீட்ட மருத்துவ குழுவினர்
மகாராஷ்டிராவில் உணவுடன் சேர்த்து தாலி செயினை விழுங்கிய எருமை மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து, தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், வசிம் மாவட்டம் சார்சி கிராமத்தில் உள்ள தம்பதியினர் ராம் ஹரி மற்றும் கீதா பாய். இவர்கள் வீட்டில் எருமை மாடு வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் உள்ள எருமை மாட்டுக்கு கீதா தான் உணவு வைப்பார். கீதா பாய் எருமை மாட்டுக்கு உணவு அளிக்கும் போது, அதில் தாலி செயின் கழன்று விழுந்துள்ளது. அப்போது, உணவுடன் சேர்த்து தாலி செயினையும் எருமை மாடு விழுங்கியுள்ளது.
பின்பு, சில மணி நேரங்களுக்கு பிறகு தாலி செயினை காணவில்லை என்பதை கீதா பாய் அறிந்தார். அப்போது தான் அவருக்கு தாலி செயினை எருமை மாடு விழுங்கியிருக்கலாம் என தெரிந்தது. உடனே, இது குறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.இந்த சம்பவம் தொடர்பாக, கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது, அவர்கள் எருமை மாட்டின் வயிற்றை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதித்த போது தங்க நகை இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, எருமை மாட்டுக்கு 63 தையல்கள் போட்டு அறுவை சிகிச்சை மூலம் தங்க நகையை மருத்துவ குழுவினர் மீட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், எருமை மாட்டை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.