பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பெண்: குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி
தந்தையின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் திடீரென்று மாயமான பிரித்தானிய பெண்மணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது அவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த மே 19ம் திகதி தமது தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்ட 48 வயதான எமிலி சாண்டர்சன் திடீரென்று மாயமானார். 11 நாட்களுக்கு பின்னர் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 8ம் திகதி மார்க் நிக்கோல்ஸ் என்ற 43 வயது நபர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கான தீர்ப்பு அக்டோபர் 6ம் திகதி வெளியாகும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் எமிலியை காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அத்துடன் பொதுமக்களிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே மே 30ம் திகதி 3 படுக்கையறை கொண்ட பாழடைந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து எமிலியின் சடலம் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில், தலையில் ஏற்பட்ட ஆழமான காயங்களால் அவர் மரணமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.