உக்ரைனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரிட்டிஷ் நாட்டவர் கைது
பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர் ஒருவரை, உக்ரைன் இராணுவத்தை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளதாக கிய்வ்(Kyiv) தெரிவித்துள்ளது.
குறித்த நபர் உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கியதாகவும் பயங்கரவாதச் செயல்களைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர், 2024ம் ஆண்டு ஜனவரியில் உக்ரைனுக்கு வந்ததாகவும், நாட்டின் தெற்கில் உள்ள மைக்கோலைவில்(Mykolaiv) இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கியதாகவும் பின்னர் அவர் உக்ரைனிய எல்லைப் பிரிவுகளில் பணியாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நபர் 2024ம் ஆண்டு செப்டம்பரில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிவதை நிறுத்திவிட்டு ஒடேசாவுக்கு(Odessa) குடிபெயர்ந்து, அங்கு அவர் பணத்திற்கு இராணுவத் தகவல்களை வழங்கி வந்துள்ளார்.




