உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு: பிரித்தானிய தூதரை வெளியேற்றியது ரஷ்யா
பிரித்தானியத் தூதரக அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாகக் கூறி, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாஸ்கோவிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் காரெத் சாமுவேல் டேவிஸ் (Gareth Samuel Davies) என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவர் ரகசியமாக உளவு வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி (FSB) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை, இது ஒரு “அடிப்படையற்ற மற்றும் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று சாடியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுப்பது குறித்து லண்டன் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.





