பிரிட்டன் – பிரச்சாரத்தின் போது நைஜல் ஃபரேஜ் மீது மில்க் ஷேக்கால் தாக்குதல் நடத்திய இளம் பெண்
பிரிட்டனின் வலது சாரி சீர்திருத்தக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் மீது ‘மில்க்ஷேக்’ பானம் பீய்ச்சியடித்த 25 வயது பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஃபராஜ் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சேதம் விளைவித்ததாகவும் அப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரிட்டனில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிலாக்டன் ஓன் சீ நகரில் ஃபராஜ் தொகுதிவாசிகளைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த மதுபானக் கூடத்திலிருந்து அவர் வெளியேறியபோது அவர் அருகில் சென்ற அந்த இளம் பெண் அவர் மீது ‘மில்க்ஷேக்’ பானத்தைப் பீய்ச்சியடித்தார். இச் சம்பவத்தால் ஃபராஜுக்குக் காயம் ஏற்படவில்லை.அந்தச் சம்பவத்தை அவர் பெரிதுபடுத்தாமல் சிரித்தார்.
இதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த இளம் பெண் ஜூலை 2ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பிரிட்டிஷ் காவல்துறை ஜூன் 5ஆம் திகதியன்று தெரிவித்தது.