கடுமையான விசா கொள்கைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் வரவை கட்டுப்படுத்தவுள்ள பிரிட்டன்

அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிப்பதை குறைத்துக்கொள்ளும் திட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அறிவித்தது.அந்த வகையில், திறனாளர் விசாக்களை பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு மட்டும் வழங்கி நிறுவனங்களை உள்ளூர் ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க வைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்கள் அந்நாட்டின் குடிநுழைவு வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைவான திறன்கள் தேவைப்படும் வேலைகளுக்கான குறிப்பிட்ட கால விசாவை சில நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்குவதும் மாற்றங்களில் அடங்கும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அந்த விசாவ் பெற, ஊழியர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைத் தாங்கள் எதிர்நோக்குவதை நிறுவனங்கள் நிரூப்பது, உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை நிபந்தனைகளில் அடங்கும்.
எந்தத் துறைகள் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கின்றன என்பதை அறிய குழு ஒன்று நய்மிக்கப்படும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு அறிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட, பிரிட்டனின் வலதுசாரி கட்சியான சீர்த்திருத்த பிரிட்டிஷ் கட்சி இம்மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகச் செய்தது. அதனால், ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதைக் குறைத்துக்கொள்ளும் கட்டாயத்தில் பிரதமர் கெயர் ஸ்டாமர் இருக்கிறார் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு ஸ்டாமரின் தொழிற் கட்சி சென்ற ஆண்டு கோடைகாலம் ஆட்சி அமைந்த சிறிது காலத்துக்குப் பிறகு வலதுசாரி கொள்கைகளுக்கு சாதகமான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அதனையடுத்து வெளிநாட்டவர் பிரிட்டனுக்குக் குடிநுழைவதைக் கட்டுப்படுத்த அவர் உறுதியளித்தார்.
முன்னைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் திறனாளர் விசா திட்டத்தை 2020ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு வழங்கப்பட்ட அந்த விசாவின் எண்ணிக்கை மும்மடங்காகிவிட்டது.
பிரிட்டனுக்குக் குடிபோகும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து மிக அதிகமாக இருந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் வரலாறு காணாத அளவில் 906,000 வெளிநாட்டவர் பிரிட்டனுக்குக் குடிபுகுந்தனர்.
அதோடு, 2021க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் நிரந்தரமாக பிரிட்டனில் வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை 80% அதிகரித்தது.