டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள பிரிட்டன்

டிரான்ஸ்-பசிபிக் வர்த்தகக் கூட்டமைப்பு உடன்பாட்டின் 12வது உறுப்பு நாடாக பிரிட்டன் அதிகாரபூர்வமாக இணைந்து உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பின்னர் பிரிட்டனுக்குக் கிடைத்திருக்கும் ஆகப்பெரிய வர்த்தக உடன்பாடு இது.இந்த இணைப்பு மூலம் உலகெங்கிலும் உள்ள தனது நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் சிறந்த முறையில் வர்த்தகம் செய்ய முடியும் என்று பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
‘CPTPP’ எனப்படும் டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவத்துக்கான விரிவான, முற்போக்கான உடன்பாட்டில் இணைய இருப்பதாக கடந்த ஆண்டு பிரிட்டன் அறிவித்து அதற்காகக் கையெழுத்திட்டது.அவ்வாறு இணைவதன் மூலம் 11 உறுப்பு நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், நியூசிலாந்து, பெரு, வியட்னாம், புருணை, சிலி ஆகிய எட்டு நாடுகளுடன் பிரிட்டன் வரிகுறைப்புச் சலுகையைப் பெறும்.மேலும், CPTPP வர்த்தக விதிகள் இனிமேல் பிரிட்டனுக்கும் பொருந்தும் என்பதால் தாராள வர்த்தக வசதியை அது பெறும்.
ஆஸ்திரேலியா, கனடா, மெக்சிகோ ஆகியன இதர மூன்று உறுப்பு நாடுகள்.ஆஸ்திரேலியாவுடனான பிரிட்டன் வர்த்தக உடன்பாடு டிசம்பர் 24ஆம் திகதி நடப்புக்கு வரும். அதற்கு அடுத்த 60 நாடுகளில் கனடா மற்றும் மெக்சிகோவுடனான உடன்பாடு எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டனின் முதல் வர்த்தக உடன்பாடு மலேசியாவுடனும் புருணையுடனும் செய்துகொள்ளப்பட்டது.
பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு இந்த உடன்பாடு ஒரு சந்தையை மட்டும் சார்ந்தது இல்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல வர்த்தக ஒழுங்குமுறையை ஒரேமாதிரி பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.அந்த ஒன்றியத்தின் வர்த்தக சுற்றுவட்டாரத்தில் இருந்து பிரிட்டன் 2020 இறுதியில் விலகியது.
வர்த்தகச் சவால்களைச் சந்தித்து வரும் பிரிட்டனுக்கு, CPTPP டிரான்ஸ்-பசிபிக் உடன்பாட்டில் இடம்பெற்றுள்ளதன் மூலம் நீண்டகாலப் போக்கில் ஆண்டுக்கு இரண்டு பில்லியன் பவுண்ட்ஸ் (S$3.4 பில்லியன்) மதிப்புள்ள வரத்தகப் பலன்கள் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1சதவீத்த்திற்கும் குறைவு.
CPTPP வர்த்தக உடன்பாட்டில் இடம்பெற்று இருக்கும் முதல் ஐரோப்பிய வட்டார நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.