பிரித்தானியா : MI6 உளவுத்துறை தலைவரின் முதலாவது உரை – மக்களின் எதிர்பார்ப்பு!
பிரித்தானியாவின் MI6 உளவுத்துறை தலைவரான பிளேஸ் மெட்ரெவெலி (Blaise Metreweli) தனது முதலாவது உரையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பில் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராகப் பொறுப்பேற்ற மெட்ரெவேலி ( Metreweli) பிரிட்டனின் வெளிநாட்டு உளவு நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி ஆவார்.
அவர் இன்று தனது முதலாவது உரையை நிகழ்த்தவுள்ளார்.
இதன்போது ரஷ்ய பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சைபர் தாக்குதல்கள் உள்பட ட்ரோன் ஊடுருவல்கள் வரை பலவற்றை எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது.
தகவல் போரை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் “இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான கண்மூடித்தனமான சைபர் நடவடிக்கைகளுக்காக” சீனாவை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்கள் மீதான சமீபத்திய தடைகளையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அதிகரித்துவரும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் பிரித்தானியாவின் தயார் நிலைகள் எப்படி இருக்கிறது என்பதை தன்னுடைய உரையில் விளக்கும் அதேவேளை தற்காப்பு நடவடிக்கைகளுக்காக பிரித்தானியாவின் கைவசம் உள்ள திட்டங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





