மியன்மாரில் இடம்பெறும் போலித் தேர்தல் – பிரித்தானியா விடுத்துள்ள அழைப்பு!
மியன்மாரில் ஆங் சான் சூ கியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 05 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இதனை பெரும்பாலான சர்வதேச நாடுகள் போலி தேர்தல் என அடையாளப்படுத்துகின்றன. காரணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெறும் தேர்தல் என்பதால் ஜனநாயக ரீதியிலான வெற்றியை அல்லது முடிவை எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) ஆங் சான் சூ கியின் (Aung San Suu Kyi) விடுதலையை வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ ஆட்சியால் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் ஆங்சாங் சூகிக்கு 27 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் இரண்டு வருடங்களாக குடும்பத்தினரை கூட சந்திக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது சூகியின் உடல்நிலை குறித்த அச்சத்தை எழுப்புகிறது. அவரது கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியும் மியன்மாாரில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இராணுவ ஆட்சிக்கு விரோதமான எந்த அரசியல் கட்சிகளும் வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





