தென்கொரியாவில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்து நால்வர் உயிரிழப்பு

தென்கொரியாவில் நெடுஞ்சாலைக் கட்டுமானத் தளம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நேர்ந்த விபத்தில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர் மற்றும் அறுவர் காயமுற்றனர்.
தலைநகர் சோலுக்குத் தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அன்சியோங் நகரில் காலை 9.50 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.
நெடுஞ்சாலைப் பாலத்தைத் தாங்கிப் பிடித்திருந்த, 50 மீட்டர் உயரம் கொண்ட ஐந்து கான்கிரீட் தூண்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து விழுந்ததாக யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் சீன நாட்டவர் இருவர் உயிரிழந்துவிட்டதாக கோ கியூங் மன் என்ற தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அறுவர் காயமடைந்ததாகவும் அவர்களில் சீனர் ஒருவர் உட்பட ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“அவர்கள் பாலத்தில் ஒரு தளத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பத்துப் பேரும் பாலத்தின்மீது இருந்தனர். தூண்கள் சரிந்ததும் அவர்கள் மேலிருந்து விழுந்துவிட்டனர்,” என்று கோ விளக்கினார்.
தகவலறிந்ததும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்துப் பணியாளர்களையும் வளங்களையும் திரட்டவும் மேலும் சேதம் நிகழாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யவும் இடைக்கால அதிபர் சோய் சங் மொக் உத்தரவிட்டார்.
அதனையடுத்து, தேடி, மீட்கும் பணியில் 150 அதிகாரிகளுடன் மூன்று ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டதாகத் தேசிய தீயணைப்புத் துறை தெரிவித்தது