பல தசாப்த கால இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் முறிவு

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 25 இந்திய குடிமக்கள் மற்றும் ஒரு நேபாளி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான உடந்தையை எதிர்த்து, பாகிஸ்தானுக்கு தெளிவான செய்தியை அனுப்ப, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு புதன்கிழமை மாலை அவசரக் கூட்டத்தைக் கூட்டியது.
அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி அமைப்பின் பகிர்வை நிர்வகிக்கும் உலக வங்கியின் மத்தியஸ்தத்தால் பல தசாப்தங்களாக நிலவும் நீர் பகிர்வு ஒப்பந்தமான 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
பல போர்கள் மற்றும் இராஜதந்திர முறிவுகளில் இருந்து தப்பிய இந்த ஒப்பந்தம் இப்போது செயலற்ற நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானுடனான தனது இராஜதந்திர உறவுகளை, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைத் துறைகளில் கணிசமாகக் குறைத்துக்கொள்ளவும் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள பாதுகாப்பு, கடற்படை, ராணுவம் மற்றும் விமான ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த நபர்கள் இனி இந்தியாவிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.