சீனாவில் சிறுவனுக்கு எமனாக வந்த பானம் – பெற்றோர் விடுத்துள்ள எச்சரிக்கை
சீனாவில் பானத்திற்குள் இருந்து உருண்டை ஒன்று மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
சம்பவத்தில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுவன் பருகிய பபுள் டீ (Bubble Tea) பானத்தில் இருந்த ‘போபா’ உருண்டையே அவனுக்கு எமனாக மாறியுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
தமது பிள்ளையின் மரணத்திற்கு பானத்தை விற்பனை செய்த கடை மற்றும் அந்தக் கடைத்தொகுதி ஆகிய இரண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் துயர சம்பவம் கடந்த வாரம் சம்பவித்தாலும் தற்போது அது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியான கண்காணிப்புக் கமரா காட்சிகளில், சிறுவன் பானத்தை அருந்திவிட்டு டிராம்போலைனில் குதித்து விளையாடியமை தெரியவந்துள்ளது.
இதன்போது பானத்தில் சேர்க்கப்படும் சுமார் 10 மில்லிமீட்டர் அளவுள்ள உருண்டை ஒன்று எதிர்பாராத விதமாகச் சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியது.
உடனடியாக நினைவின்றி விழுந்த சிறுவனை எழுப்ப தாய் தீவிரமாக முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, சிறுவர்களுக்கு இந்த பானம் உகந்தது அல்ல என்று கடையில் எந்தவித அறிவிப்பும் இல்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடைத்தொகுதியில் சிறுவனுக்கு உரிய முதல் உதவி உடனடியாகக் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.





