போண்டி துப்பாக்கிச்சூடு – தாக்குதல்தாரிகள் பிலிப்பைன்ஸ் சென்றதன் நோக்கம் என்ன?
போண்டி கடற்கரை தாக்குதல்தாரிகள் தாக்குதலுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் சென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தாக்குதல்தாரிகள் பயணித்த சிசிரிவி காட்சிகளை ஆஸ்திரேலிய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த காணொளிகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப மதிப்பீடுகள் தாக்குதல்தாரிகள் இருவரும் தனியாக செயல்படுவதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பரந்த பயங்கரவாதக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் அல்லது தாக்குதலை நடத்துவதற்கு மற்றவர்களால் வழிநடத்தப்பட்டவர்கள் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தாக்குதல்தாரிகள் சுற்றுலாவிற்காக பிலிபைன்ஸ் செல்லவில்லை என்றும், அவர்கள் அங்கு சென்றதன் நோக்கம் புலப்படவில்லை எனவும் கமிஷனர் பாரெட் (Barrett) தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதல்தாரிகளில் தந்தை இந்திய கடவுச்சீட்டையும், மகன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டையும் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் டாவோவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
டாவோ என்பது பிலிப்பைன்ஸின் முக்கிய தெற்கு தீவான மிண்டானாவோவின் கிழக்கில் உள்ள ஒரு பரந்த பெருநகரமாகும். மத்திய மற்றும் தென்மேற்கு மிண்டானாவோவின் வறிய பகுதிகளில் இஸ்லாமிய போராளிகள் செயல்படுவதாக அறியப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புகளை மேற்கொள்ள அங்கு சென்றார்களா என்பது தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், துப்பாக்கி ஏந்திய இருவருமே “இஸ்லாமிய அரசு” சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.





