டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

டெல்லியில் தொடர்ந்து 2வது நாளாக 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட மிரட்டலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருள்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருள்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது. பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அவர்களின் குழந்தைகளுடைய உடல்களை கண்ணீர்விட்டு, எடுத்துச்செல்லும் செய்திகளைப் பார்த்து நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்,”’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிச்மண்ட் குளோபல் பள்ளிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சலில், “நீங்கள் அனைவரும் துன்பப்படுவதற்குத் தகுதியானவர்கள். நான் உண்மையிலேயே என் வாழ்க்கையை வெறுக்கிறேன்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்ட தகவலிலிருந்து தெரிய வருகிறது
“எனக்கு ஒருபோதும் உண்மையிலேயே உதவி கிடைக்கவில்லை, மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், யாரும் இதுவரை என்மீது அக்கறை கொள்ளவில்லை, யாரும் எனக்காக கவலைப்பட மாட்டார்கள். மனநல மருந்துகள் உதவும் என்று மக்களை மூளைச் சலவை செய்கிறீர்கள். ஆனால் அவை உதவுவதில்லை, இதற்கு நானே வாழும் சாட்சி. எனவே என்னைப் போலவே நீங்களும் துன்பப்படுவதற்குத் தகுதியானவர்கள்,” என்றும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் லைன்சில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. மிரட்டல் பெறப்பட்ட 23 பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு துறை ஆகியவை தேடுதல் பணிகளில் ஈடுபட்டன.
இந்த வார தொடக்கத்தில் திங்கள் முதல் புதன் கிழமை வரை டெல்லியில் உள்ள 10 பள்ளிகள் மற்றும் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு இதே போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படும் வேளையில் வந்துள்ள அந்த மிரட்டல்கள் புரளி என்பது தெரியவந்துள்ளது
டெல்லியில் பள்ளிகளுக்கு விடுக்கப்படும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவர்களும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளனர்.