இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் – சிக்கிய இளைஞன்
இந்தியாவின் பல விமான நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டமை தொடர்பில் 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி அடையாளத்தைப் பயன்படுத்தி அந்த இளைஞர் சமூக ஊடகத் தளங்களில் மூன்று வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாகத் தெரிகிறது.
ஏர்-இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளையருக்கு ஒருவரோடு வர்த்தகத் தகராறு இருந்ததாகவும் அவரைச் சிக்கலில் மாட்டிவிட அவரது பெயரைப் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாகவும் நம்பப்படுகிறது.
இந்திய விமான நிறுவனங்களுக்கு வரிசையாகப் பத்துக்கும் அதிகமான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
அனைத்தும் விசாரிக்கப்படுவதாகவும் அவற்றில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறினர்.