மின்னஞ்சல் மூலம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாஜ்மகாலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கவிருப்பதாக அடையாளம் தெரியாத சிலர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.அந்த மின்னஞ்சல் உத்தரப் பிரதேச மாநிலச் சுற்றுலாத் துறைக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மோப்ப நாய்களுடன் காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினரும் தாஜ்மகாலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடனடிச் சோதனையை மேற்கொண்டனர்.
“சுற்றுலாத் துறைக்கு வந்த மின்னஞ்சலில் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நாங்கள் முழுமையாகச் சோதனை மேற்கொண்டோம். இருப்பினும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று உதவி காவல் ஆணையர் சையது அரீப் செய்தியாளர்களிடம் கூறினார்.
“மின்னஞ்சலில் போலி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
இதன் தொடர்பில் தாஜ்மகால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்க, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.