மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பயணி ஒருவர் வெடிக்கும் பொருள்களைக் கொண்டு சென்றதாக ஒரு மர்ம நபர் புதன்கிழமை பிற்பகல் கூறியிருந்தார். பிற்பகல் மூன்று மணியளவில் உள்நாட்டுப் பயணங்களுக்கான ஒன்றாம் முனையம் அந்த மிரட்டல் குறித்துத் தெரியப்படுத்தப்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
மும்பையிலிருந்து அஸர்பைஜானுக்குப் பயணம் மேற்கொள்ளும் முகம்மது என்ற பெயரைக் கொண்ட நபர் ஒருவர் வெடிகுண்டுப் பொருள்களை வைத்திருந்தார் என்று மர்ம நபர் கூறியிருந்தார். மிரட்டல் குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்திய நிறுவனங்களின் விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளன.
இதற்கிடையே, நாக்பூரிலிருந்து கோல்கத்தாவுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது ராயப்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாகக் காவல்துறை தெரிவித்தது. அவ்விமானத்தில் 187 பயணிகளும் ஆறு விமான ஊழியர்களும் இருந்தனர்.