இந்தோனேசியாவில் தொழுகையின்போது வெடித்த குண்டு – 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இந்தோனேசியாவில் பள்ளிவாசல் ஒன்றில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 55 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவின் (Jakarta) கெலாபா காடிங் (Kelapa Gading) பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நேரத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பெரும்பாலான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மசூதியில் பிரசங்கம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, நண்பகலில் இரண்டு பெரிய குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயதான இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரவித்தனர். அவருக்கு அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காவல்துறை விசாரணை முடிவடையும் வரை குண்டுவெடிப்புகள் குறித்த ஊகங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




