ஹோட்டலாக மாறும் போகம்பர சிறைச்சாலை
போகம்பரை சிறைச்சாலையை வரலாற்று கட்டிடக்கலை கொண்ட ஹோட்டல் வளாகமாக மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பிரதான வளாகத்தை வணிக வளாகம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக கட்டிடமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களை பாதுகாத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர்ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டுச் சபையும் இணைந்து தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளதாகவும், அதற்கான மதிப்பீடுகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
138 வருடங்களாக இயங்கி வந்த போகம்பர சிறைச்சாலை மூடப்பட்டதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அதன் செயற்பாடுகள் பல்லேகலவில் உள்ள புதிய சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
போகம்பர சிறைச்சாலை தற்போது பொது கண்காட்சிக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.