உலகளவில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ள போயிங் நிறுவனம்
போயிங் நிறுவனம் உலகளவில் அதன் ஊழியரணியில் 10சதவீத்த்தினரை, அதாவது 17,000 பேரை, ஆட்குறைப்பு செய்யவுள்ளது.அதன் ‘777X’ ரக விமானங்களின் முதல் விநியோகம் ஓராண்டுக்குத் தள்ளிவைக்கப்படும். மூன்றாம் காலாண்டில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலமாக நீடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
33,000 அமெரிக்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஈடுபட்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால், ‘737 மேக்ஸ்’, ‘767’, ‘777’ ரக விமானங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.உண்மையான நிதி நிலவரத்துடன் ஒத்துப்போக, அந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தேவை என்று தலைமை நிர்வாக அதிகாரி கெலி ஓர்ட்பெர்க் ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டார்.
“வரும் மாதங்களில் நமது ஒட்டுமொத்த ஊழியரணியில் கிட்டத்தட்ட 10 சதவீத்த்தினரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடுகிறோம். நிர்வாகிகள், மேலாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், போயிங் பங்குகள் 1.1 சதவீதம் குறைந்தன.
ஆட்குறைப்பு நடவடிக்கை, வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்த ஊழியர்களுக்கு நெருக்குதல் கொடுக்கலாம் என்று ‘கிரேட் ஹில் கேப்பிடல்’ நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் தாமஸ் ஹேய்ஸ் கூறினார்.
“வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்குத் தற்காலிகமாகச் சம்பளம் கிடையாது. அவர்கள் நிரந்தரமாகச் சம்பளம் பெறாத நிலையில் இருக்க விரும்பமாட்டார்கள்,” என்று ஹேய்ஸ் மின்னஞ்சல் ஒன்றில் கூறினார்.
“ஆட்குறைப்பு செய்யப்படவிருக்கும் 17,000 ஊழியர்களில் தாங்களும் ஒருவராக இருப்பதைத் தவிர்க்க விரும்புவதால், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒரு வாரத்தில் தீர்வுகாணப்படும் என்று நான் மதிப்பிடுகிறேன்,” என்றார் அவர்.