ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது
ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்க ஜயதிலக்க என்ற இலங்கை பெண்ணின் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டதாக தூதுவர் தெரிவித்தார்.
மேலும், தூதரக அதிகாரிகள் குழு மற்றும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவும் சடலத்தை அடையாளம் காணும் வாய்ப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி, இஸ்ரேலில் உள்ள அனுலா ரத்நாயக்க ஜயதிலக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது நெருங்கிய உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
சமய சடங்குகளின் பின்னர் சடலம் அடுத்த விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அனுலா ரத்நாயக்க என்ற இலங்கைப் பெண் இஸ்ரேலில் தாதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.