கருப்பு பெட்டி மீட்பு: விசாரணை தீவிரம்!
மகாராஷ்டிராவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.
மேற்படி விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
துணை முதல்வரின் இறுதிச்சடங்கு பூரண அரச மரியாதையுடன் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய மத்திய விமான போக்குவரத்து துறை உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதமும் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி கடிதத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
“ விமான விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு பிரிவு (AAIB) Aircraft Accident Investigation Bureau ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டது.
கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விமான விபத்து தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும்.” – என அக்கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப தரவுகள், விமானத்தின் இயக்கம், விபத்து நேரிட்ட பகுதி என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.
விமான விபத்து குறித்து விரைவாக விசாரணை நடத்த மகாராஷ்டிர மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.




