பா.ஜ.க.– சிவ சேனா கூட்டணி வசமாகிறது மும்பை மாநகராட்சி!
முப்பை மாநகராட்சியை பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் சாத்தியம் உருவாகியுள்ளது.
வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பா.ஜ.க. – சிவ சேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (15) நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் வரையிலான நிலைவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 869 தொகுதிகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி ஆயிரத்து 145 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) , மகாராஷ்டிரா நவ நிர்மாண்(எம்என்எஸ்) கூட்டணி 136 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மொத்தமுள்ள 227 தொகுதிகளில் பாஜக-சிவ சேனா கூட்டணி 118 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
இதில், பாஜக 89 தொகுதிகளிலும், சிவ சேனா 29 தொகுதிகளிலு; முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம், மும்பை மாநகராட்சியை இந்த கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
கடைசியாக 2017ல் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
சுமார் 26 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஒருங்கிணைந்த சிவ சேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், தற்போது அது பாஜக – சிவ சேனா கூட்டணி வசம் சென்றுள்ளது.




