ஜப்பான் பண்ணைகளில் பரவும் பறவைக் காய்ச்சல் ; சுமார் 50,000 கோழிகள் அழிப்பு
ஜப்பானின் ‘இவாட்டே’ பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து, அந்நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) கிட்டத்தட்ட 50,000 கோழிகளைக் கொல்லத் தொடங்கினர்.
ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பருவத்தில் ஏற்பட்டுள்ள 19வது பறவைக் காய்ச்சல் பரவல் இது என்று வேளாண்துறை அமைச்சு கூறியது.
கோழிகளின் மரண எண்ணிக்கை அதிகரிப்பதாக பண்ணை ஒன்று கூறியது. அதற்குப் பறவைக் காய்ச்சலே காரணம் என்று சோதனை முடிவுகள் காட்டியதாக அமைச்சு தெரிவித்தது.அதனால், அங்குள்ள 50,000 கோழிகள் கொல்லப்பட்டதாக ‘இவாட்டே’ அரசாங்கம் கூறியது. அதோடு, 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்ற இரண்டு பண்ணைகளில் இருக்கும் 170,000 பறவைகளின் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பண்ணைக்குப் பத்து கிலோமீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 3.8 மில்லியன் பறவைகள் தற்போதைக்கு அந்த வட்டாரத்திற்குள்ளேயே இருக்கவேண்டும்.
கடந்த ஜனவரி 2ஆம் திகதி, ‘இவேட்டே’ பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையிலும் மத்திய ‘ஐச்சி’ வட்டாரத்தில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியது. அங்கிருந்த நூறாயிரக்கணக்கான பறவைகளும் கொல்லப்பட்டன.
சென்ற ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி, கிழக்கு ‘இபாராக்கி’ பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதும் 1.08 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டது.